துரத்தியடிக்கும் கொரோனா முடங்கிய விளையாட்டு உலகம்!

கொரோனா வைரஸின் தாக்கத்தால் சர்வதேச விளையாட்டு வீரர்களின் வருமானம் குறைந்துள்ளது. மேலும் விளம்பர வருவாய் இல்லாததால் விளையாட்டு உலகமும் முடங்கியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் பெருமளவு பாதிப்படைந்துள்ளது. தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், ஒலிம்பிக் உள்பட பல விளையாட்டுப் போட்டிகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதனால் உலகெங்கும் உள்ள விளையாட்டு வீரர்களின் வருமானமும் குறைந்துள்ளது. உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் கடந்த ஆண்டு மூவாயிரம் கோடியாக இருந்தது. ஐ.பி.எல் நடந்தால் நான்காயிரம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், அது நடக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஆண்டு மிகப்பெரிய வருமானம் ஈட்டினர். இந்திய கேப்டன் விராட் கோலி, கடந்த ஆண்டு கோடையில் ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் மட்டும் பதினேழு கோடி வருமானம் பெற்றார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் தங்களது ஊதியத்தில் இருபது சதவீதத்தைக் ஆறுமாத காலத்திற்கு குறைத்துக்கொள்ள தாமாக முன்வந்துள்ளனர். எண்பது சதவீத ஊழியர்களுக்கு ஜூன் மாதம் வரை இருபது சதவீதம் ஊதியம் வழங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகள நடைபெறாததால் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு வீரர்களுக்கும் இது இக்கட்டான காலகட்டமாக அமைந்துள்ளது. அதேபோல் பார்சிலோனா, ஜுவெண்டஸ், அர்செனல், பேயர் லிவர்க்குசன் உள்ளிட்ட கால்பந்து அணி நிர்வாகமும் பனிரெண்டிலிருந்து எழுபது சதவீதம் வரை வீரர்களின் ஊதியத்தில் கைவைத்துள்ளன.

ஃபார்முலா ஒன் கார்பந்தய வீரர்களான லூயிஸ் ஹாமில்டன், செபாஸ்டியன் வெட்டல் உள்ளிட்டோரும் மெர்சிடிஸ் மற்றும் ஃபெராரி நிறுவனங்களின் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் பி.ஜி.ஏ டூருக்கு அடுத்தபடியாக இருக்கும் ஐரோப்பிய கோல்ஃப் டூரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதினோரு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள பி.ஜி.ஏ ஜூன் மாதத்தில் குறைந்த ஊதியத்திற்கு போட்டியில் கலந்துகொள்ளுமாறு வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா அச்சத்தால் போட்டி நடத்தினாலும் ரசிகர்கள் கூடுவார்களா என்ற அச்சம் விளம்பர நிறுவனங்களிடம் நிலவுகிறது. அதனால் விளையாட்டுத்துறை மீது செய்யப்படும் விளம்பர முதலீடுகள் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களின் புது விளம்பர ஒப்பந்தங்களும் நிகழவில்லை. இதனால் கொரோனாவின் தாக்கத்தால் விளையாட்டு உலகம் மொத்தமாக முடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *