`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..!’- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா

மனிதகுலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடூரமான இந்த கொரோனா நேரத்திலும் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த செய்திகளில் முதல் இடத்தில் இருப்பது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை தொடர்பான செய்திதான். கடந்த சில வாரங்களாக கிம் ஜாங் உன் தொடர்பான பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன.

அதிக புகை மற்றும் மதுப் பழக்கம், அளவை மீறிய உடல் எடை, உணவு பழக்கவழக்கம் போன்ற காரணத்தால் கிம்முக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்காக நடந்த அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதால், கிம் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் தீயாய்ப் பரவின. உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் மற்றும் ரகசியத்துடன் இருக்கும் நாடு, வட கொரியா. அங்கிருந்து, அந்நாட்டு அதிபரைப் பற்றியே வெளிவரும் வதந்திகளின் உண்மைத்தன்மையை அறிய பலநாடுகளும் போராடின. குறிப்பாக தென் கொரியா.

இறுதியாகக் கடந்த வாரம், வட கொரியாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை கிம் ஜாங் உன் திறந்துவைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. அதன் பிறகே கிம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருந்தும், தொழிற்சாலை திறப்புவிழாவில் பங்கேற்றது கிம் இல்லை என்பதுபோல பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாய்வழி பாராட்டு தெரிவித்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகத்தை அச்சுறுத்திவரும் கொடுமையான கொரோனா வைரஸ் தாக்குதலின்போது, மிகவும் திறம்பட செயல்பட்டு அதிலிருந்து மீண்டு வந்ததற்கு சீனாவுக்கு பாராட்டுகள்’ என கிம் கூறியுள்ளதாகவும், சீன அதிபரின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளும்படி அவருக்குக் கூறியதாகவும் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *