`சகஜ நிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கும்; குழந்தைகள் எப்போது பள்ளிக்குப் போவார்கள்; வியாபாரம் எப்போது மீண்டும் தலையெடுக்கும்; சகஜ வாழ்க்கை எப்போது திரும்பும்… என்று கேள்விகள் சூழ்ந்த காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற பல கேள்விகளுக்கு பங்கேற்பாளர்களோடு சேர்ந்து விடைதேட, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹாவுடன் காணொலிக் காட்சி மூலம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது சென்னை இன்டர்நேஷனல் சென்டர்’.வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன்’ என்ற அடையாளத்தைத் தாண்டி ஜெயந்த் சின்ஹாவுக்கு வேறு பல அடையாளங்களும் உண்டு. ஐ.ஐ.டி, டெல்லி, அமெரிக்காவின் ஹார்வர்ட் என்று புகழ்பெற்ற கல்வி கேந்திரங்களில் பயின்றவர்,`மேக்கின்ஸி’ என்கிற சர்வதேச கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். மோடியின் கடந்த ஆட்சியில் நிதித்துறையின் இணை அமைச்சராகவும் இருந்தவர்.

அவர் பேசுகையில், “இப்படி ஒரு பெரும் பாதிப்பை உலகம் சந்தித்து மிகச் சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன. 1918 ஆண்டு துவங்கி, சில காலம் உலகை வாட்டி வதைத்த ஒரு கொள்ளை நோய் ஸ்பானிஷ் ஃப்ளூ. பொதுவாக ஏறுமுகமாகவே இருக்கும் நம் நாட்டின் மக்கள் தொகை இந்த காலகட்டத்தில், 6 சதவிகிதம் குறைந்தது. இது நம்நாட்டில் மட்டுமல்ல, உலகின் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டது.

பொருளாதாரம் தடுமாற்றம் என்றால், உடனடியாக நினைவுக்கு வருவது, 2008ம் ஆண்டு நாம் பார்த்த பொருளாதார தேக்கநிலை. அதன் தாக்கம், பல ஆண்டுகளுக்கு இருந்தது. ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பது அதைவிடவும் உக்கிரமானது. காரணம் 2008ம் ஆண்டு நாம் பார்த்த பொருளாதார தேக்கநிலை என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத்தான் அதிகம் பாதித்தது. நிதி நிறுவனங்கள்தான் நிலைகுலைந்தன. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும், ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பது உலகின் எல்லா நாடுகளையும் எல்லாத் துறைகளையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது.

பொருளாதாரம்

இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தெரியவேண்டுமானால் அதற்கான பதில் மூன்று கேள்விகளில் மறைந்திருக்கிறது

‘ஒருவருக்கு கோவிட் 19 தொற்று இருக்கிறதா இல்லையா?’, என்று கண்டறியும் PCR போன்ற சோதனை சாதனங்கள், குறைந்த செலவில், அதிகமான எண்ணிக்கையில் எப்போது கிடைக்கும்..? அதிகமான எண்ணிக்கையில் சோதனை செய்யப்பட்டால்தான் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவே முடியும். சிகிச்சை அளிக்க அவர்களுக்கு எப்போது மருந்து கண்டுபிடிக்கப்படும்..? அது அவர்களுக்கு எப்போது கிடைக்கும்..? இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஆறு ஏழு ஆராய்ச்சி மையங்களில் இதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள். அவை இப்போது சோதனையில் இருக்கின்றன. இவை எல்லாவிதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளையும் தாண்டி மக்களுக்குக் கிடைக்க, மேலும் ஆறு மாதங்கள் ஆகும். மருந்து வந்துவிட்டால் மட்டும் இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்துவிட முடியாது. இந்த தொற்று பரவாமல் இருக்கத் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இதை உருவாக்குவதில் இப்போது விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். ஆனால் இவை மக்களுக்குக் கிடைக்க… 18 மாதங்களில் இருந்து 25 மாதங்கள்வரை ஆகும்.

இதுதான் நிதர்சனம்” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *